கோலாலம்பூர், நவம்பர் 04-
DAP – யைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், தனது வீட்டில் 94 லட்சம் வெள்ளி ரொக்கத்தை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பெரிக்காத்தான் நேஷனலின் பென்டாங் எம்.பி., அந்த DAP தலைவரின் பெயரை 24 மணி நேரத்திற்குள் அம்பலப்படுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பென்டாங் எம்.பி. அவாங் ஹஷிம், கூறியுள்ள இந்த கண்மூடித்தனமாக குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றால் தனது பொறுப்பற்ற செயலுக்காக பென்டாங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று DAP ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவையில், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எந்தவொரு எம்.பி.யும் தவறாக பயன்படுத்தக்கூடாது.
DAP தலைவருக்கு எதிராக பென்டாங் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டு கடுமையானதாகும். DAP- யைச் சேர்ந்த எந்த எம்.பி., தனது வீட்டில் 94 லட்சம் வெள்ளி ரொக்கத்தை வைத்திருந்தார் என்பதை பென்டாங் எம்.பி 24 மணி நேரத்திற்குள் அம்பலப்படுத்த வேண்டும். தவறுவாரேயானால், அவர் மக்களவை உரிமை மீதான சுயேட்சைக்குழுவின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று RSN ராயர் சவால் விடுத்துள்ளார்.