ஒற்றுமையில் மிளிர்ந்தது தேசியப் பொங்கல் விழா

ஜன. 19-

நாட்டின் தாய்க்கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்து இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா ஏற்பாட்டில் பத்துமலைத்திருத்தலத்தில் இன்று மாலை 4.00 நடைபெற்ற தேசிய ஒற்றுமை பொங்கல் விழாவில் ஆண்களும் பெண்களும் பெருவாரியாக திரண்டு 200 மண்பானைகளில் ஒரு சேர பொங்கலிட்டு, ஒற்றுமையை மிளிரச் செய்தனர்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா மற்றும் மஹிமாவின் தேசியத் தலைவர் டத்தோ என். சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒற்றுமை பொங்ல் விழா 2025 க்கு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

மதியம் 12 மணியளவில் பத்துமலைத்திருத்தலத்தில் இந்திய கலாச்சார திறப்பு விழாவிற்கு பிறகு மாலை 4 மணிக்கு தொடங்கிய ஒற்றுமைப் பொங்கல் விழா, மேளதாள,நாதஸ்வரம் முழங்க பொம்மலாட்டம், பொய்கால் ஆட்டம். கிராமிய நடனங்கள் ஆகிய முத்தாய்ப்பு நிகழ்வுடன் தொடங்கியது.

பத்துமலைத்திருத்தளத்தில் கார் நிறுத்தும் இடத்தில் மாபெரும் கூடாரம் அமைக்கப்பட்டு, பிரதான மேடையில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள், கலைவிழா நடைபெற, கூடாரத்திற்கு வெளியே பரந்த வளாகத்தில் கரும்பு சோலைகள் போல் முக்கோண வடிவில் கரும்புகள் கட்டப்பட்டு, ஆண்களும் பெண்களும் 200 பானைககளில் பொங்கலிட்டது ஒரே வண்ணமயமாக அமைந்தது.

முன்னதாக, தேவஸ்தானத்தின் பிரதான குருக்கள் சிவக்குமார் பட்டர் முன்னிலையில் ஒற்றுமைப் பொங்கல்விழாவை தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் துணைவியார் புவான் ஸ்ரீ மல்லிகா, , குத்துவிளக்கேற்றி, மலர் தூவி, தீபாரதணை காட்டி, பொங்கல் புதுப்பானையில் பால் ஊற்றி, நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து டான்ஸ்ரீ நடராஜா, டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ சிவகுமார் ஆகியோர் புதுப்பானையில் பால் ஊற்றியப்பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்வு ஏககாலத்தில் தொடங்கியது.

எங்கும் மேளதாளம் முழுங்க, இளையோர் முதல் பெரியோர்கள் வரை பெண்களும், ஆண்களும் மிக உற்சாத்துடன் பொங்கல் வைக்கத் தொடங்கினர். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான பொங்கல் விழாவை மக்களோடு மக்களாக பத்துமலைத்திருத்தலத்திற்கு வருகைப் புரிந்த சுற்றுப்பயணிகளும் கண்டு களித்தனர்.

பொங்கல் பொங்கி வந்த போது அனைவரம் ஒரே சேர பொங்கலோ….. பொங்கல் என முழுங்கியது, தமிழர்களின் உற்சாகத் திருநாள் பாரம்பரியத்தின் தொன்மை, நான்கு திக்கிலும் எதிரொலித்தது.

பிரதான மேடையில் ஈப்போ செபஸ்டியன் கலைக்கூடம் உட்பட நாட்டின் முன்னனி கலைப்படைப்பாளர்கள் பங்கு கொண்டு , கிராமிய நடனங்களை வழங்கியது நிகழ்வுக்கு மெருகு சேர்த்தது.

முன்னதாக, பொங்கல் விழாவையொட்டி காலை முதல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான உறியடி, பூச்சரம் பின்னுதல், மார்டன் ஜல்லிக்கட்டு, மெது சைக்கிள் ஓட்டம், கயிறு இழுத்தல், வண்ணம் தீட்டும் போட்டி, மாட்டு வண்டி சவாரி, வலுக்கு மரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றன.

பலர் ஆர்வத்துடன் பங்கேற்ற, கலையோடுகூடிய இப்போட்டி விளையாட்டுகள், தமிழர் பண்பாட்டு அடையாளங்களாக விளங்கியதுடன், மஹிமாவின் தேசிய ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

WATCH OUR LATEST NEWS