சீனப் புத்தாண்டை முன்னிட்டு 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு – பொதுப்பணி அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன.24-

2025 ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி ஜனவரி 27 நள்ளிரவு முதல் ஜனவரி 28 நள்ளிரவு வரை வகுப்பு 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தேசிய எல்லைகளில் உள்ள டோல் சாவடிகளில் இந்த தள்ளுபடி கிடையாது என பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தள்ளுபடி மூலம் ஏற்படும் 20.08 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அரசு டோல் சாவடி நிறுவனங்களுக்கு வழங்கும். இதற்கு முன்பு விழாக் காலங்களில் இலவச டோல் கட்டண முறையை அரசு பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. 2023 முதல் 2024 வரை இதற்காக 356.18 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தகுந்த பயண திட்டமிடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், MYPLUS-TTA செயலியை பதிவிறக்கம் செய்து பயண நேரத்தை அறிந்து கொள்ளவும், சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து நிலவரங்களை அறிய LLM இன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிடலாம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS