பெட்டாலிங் ஜெயா, பிப்.3-
முகநூலில் போலியான சிலாங்கூர் மாநில உதவித் திட்டமாக Bantuan Kehidupan Sejahtera Selangor – Bingkas உதவிக்கான இணைப்பைப் பரப்பும் கணக்கை அரசாங்கம் கண்டறிந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடக மோசடிகளின் தந்திரச் செயல் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்பால் சாரி கேட்டுக் கொண்டார். பொறுப்பற்ற நபர்கள் தங்களின் இவ்வாறானப் பதிவை நீக்கிவிட்டு மனம் மாற வேண்டும் என்றும், அவர்கள் சிலாங்கூர் மக்களை மட்டுமல்லாமல், உதவி தேவைப்படுபவர்களையும் குறி வைக்கிறார்ர்கள் என்றும் அவர் கூறினார்.
முகநூல் கணக்கு ஒன்று, அரசாங்கம் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 ரிங்கிட் அல்லது மாதத்திற்கு 300 ரிங்கிட் Bingkas திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குவதாக விளம்பரம் செய்ததுடன், விண்ணப்பத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது.
Bingkas உதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதன் அதிகாரப்பூர்வ தளங்களைப் பார்க்க வேண்டும் என்றும், தகவல்களை உறுதி செய்வதற்காக தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளையோ, Media Selangor அல்லது SELangkah செயலி மூலம் தகவல்களைப் பெறலாம் என்றும் அன்பால் நினைவூட்டினார்.