சிம்பாங் மோரிப், பிப்.12-
கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 10 முதல் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 5 கி.மீ மெய்நிகர் ஓட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 2025/2026 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர், மாணவர்களுக்கு உடல் நலம், விளையாட்டு போன்றவற்றில் தொடர் ஈடுபாடு இருப்பதை உறுதி செய்ய இந்த மெய்நிகர் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கு கொண்ட மாணவர்கள் தாங்கள் ஓட இருக்கும் 5 கிலோ மீட்டர் வழித்தடத்தை அவர்களே முடிவு செய்து, பெற்றோர் கண்காணிப்பில் ஓடுவார்கள். ஓடும் தூரம், எடுத்துக் கொண்ட நேரம், ஓடிய வழித்தடம் ஆகியவை ஒரு செயலி வாயிலாக பதிவு செய்யப்படும். அந்தப் பதிவை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் சேகரித்து மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும்.
இந்த மெய்நிகர் ஓட்டம் மாணவர்களிடையே உடல் நலத்தை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆர்வத்தையும் தூண்டியது. பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த வாரம், பள்ளியில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்படும். இந்த புதுமையான ஓட்டம் மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மெய்நிகர் ஓட்டங்களில் பங்கேற்க அவர்களை ஊக்குவித்தது.