கத்தும்பா தோட்டத் தமிழப்பள்ளிக்குத் தற்காலிகமாக பின்ஜோல் தமிழ்ப்பள்ளியில் இடம்

பாலிங், பிப்.18-

கெடா, பாலிங்கில் அமைந்திருந்த கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, நிரந்தர இடமின்றி அலைக்கழிக்கப்பட்ட நிலையில், தற்போது குவாலா கேட்டில்- பின்ஜோல், கம்போங் தூஜோவில் உள்ள பின்ஜோல் தமிழ்ப்பள்ளியில் தற்காலிகமாக ஓர் சிறிய இடம் வழங்கப்பட்டுள்ளது .

அண்மைக் காலமாக கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர இடமின்றி, மாணவர்களும் ஆசிரியர்களும் எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தப்பட்சத்தில் இப்பொழுது கெடா மாநில கல்வி இலாகா, தற்காலிகமாக பிந்ஜோல் தமிழ்ப்பள்ளியில் சிறு இடத்தில் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக பள்ளி வாரியக்குழுத் தலைவர் கிருஷ்ணன் முனியாண்டி தெரிவித்தார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி பழைய இடத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, பெக்கான் தாவார் தேசிய பள்ளியில் ஒரு பகுதி கட்டிடம் ஒதுக்கி தரப்பட்டதாக கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

எனினும் பெக்கான் தாவார் தேசியப் பள்ளியில் மூன்று மாடி இணைக்கட்டடம் நிர்மாணிக்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், கத்தும்பா தமிழ்ப்பள்ளி, அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கெடா மாநில கல்வி இயக்குநர் ஹாஜி இஸ்மாயில் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கெடா மாநில 2025 கல்வி ஆண்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், பிரிதொரு தேதி அறிவிக்கப்படும் வரையில் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் கத்தும்பா தமிழ்ப்பள்ளி, பின்ஜோல் தமிழ்ப்பள்ளியின் ஒரு சிறிய இடத்தில் தற்காலிகமாக இயக்குவதற்கு மாநில கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியிருப்பதை கிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

கத்தும்பா தமிழ்ப்பள்ளியில் 10 மாணவர்கள் பயின்று வரும் வேளையில் 6 ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க கத்தும்பா தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை இழந்து விடக்கூடாது என்பதால், அப்பள்ளிக்கு நிரந்தர நிலம் கேட்டு, கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முழு வீச்சில் போராடி வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS