ஹைதராபாத், பிப்.23-
தெலுங்கானாவில் சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து விளைநிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும் பணிகளுக்காக 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த போது நேற்று திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் மீட்கப்பட்டு விட்டனர். எஞ்சிய 8 பேரை மீட்கும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவினர் இணைந்து மீட்புப்பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஒன்றிணைந்துள்ளனர்.
இது குறித்து மீட்புப் பணியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதியை மீட்புக் குழுவினர் கிட்டத்தட்ட எட்டிவிட்டனர். சேறும், சகதியுமாக இருப்பதால் மீட்பு பணி தாமதம் ஆகி வருகிறது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.