கோலாலம்பூர், பிப்.25-
மலேசிய இளைஞர் மேம்பாட்டு ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் இன்று முதல் தேசிய விளையாட்டுக் கழகத்தின் (ISN) புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎஸ்என்-ல் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ள 56 வயதான வெள்ளப்பாண்டியன், நேற்றுடன் பணிக்காலம் முடிவடைந்த அகமது ஃபைட்சால் முகமட் ரம்லிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ISN வாரியத் தலைவர் டத்தோ மரினா சின், நியமனத்தை அறிவித்தார். வெள்ளப்பாண்டியன் விளையாட்டு அறிவியல், விளையாட்டு உளவியல், ஆராய்ச்சி மற்றும் தடகள செயல்திறன் மேம்பாடு ஆகியவற்றில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.
உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் உயரடுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் அவரது நிபுணத்துவம், தேசிய விளையாட்டு மேம்பாட்டை ஆதரிப்பதில் ISN ஐ உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது என்று அவர் இன்று ISN இல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
யார் வேண்டுமானாலும் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பொது நடைமுறையின் கீழ் வெள்ளப்பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளைஞர், விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனமான IYRES இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதுடன், ISN இன் விளையாட்டு செயல்திறன் பிரிவின் இயக்குநராகவும், போடியம் திட்டத்தின் தலைவராகவும் வெள்ளப்பாண்டியன் இருந்துள்ளார்.