போலீசாரால் தேடப்பட்டு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஜோகூர் பாரு, மார்ச்.08-

போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச்செயல்கள் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர், இன்று அதிகாலையில் போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜோகூர்பாரு, தாமான் மோலேக்கில் அதிகாலை 3.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 63 வயதுடைய நபரை, சோதனைக்காகத் தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். எனினும் அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முற்பட்ட போது, போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

முன்னதாக, ஜாலான் பெர்சியாரான் பூமி ஹீஜாவிலிருந்து தாமான் மோலேக்கை நோக்கி சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த ஹோண்டா Vario மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை , ஜோகூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த D9 கடுங்குற்றத் தடுப்பு போலீசார் அடையாளம் கண்டனர்.

அந்த மோட்டார் சைக்கிளைப் பின் தொடர்ந்து சென்ற போலீசார், அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும் அந்த மோட்டார் சைக்கிளோட்டி, போலீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 14 குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS