இஸ்மாயில் சப்ரியிடம் இரண்டாவது நாளாக எஸ்பிஆர்எம் விசாரணை

புத்ராஜெயா, மார்ச்.14-

177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் ஊழல், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் இரண்டாவது நாளாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை செய்து வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.46 மணியளவில் இஸ்மாயில் சப்ரியின் கார், ரோந்துப் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகக் கட்டட நுழைவாயிலில் நுழைந்தது.

நுழைவாயிலில் காத்திருந்த செய்தியாளர்களை நோக்கி புன்னகைத்தவாறு இஸ்மாயில் சப்ரி சென்றார். நேற்று முதல் முறையாக 5 மணி நேரத்திற்கும் அதிமாக இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணை செய்த வேளையில் அதன் தொடர்ச்சியாக இன்று அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரியின் வீட்டிலிருந்து 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்வது, வாக்குமூலம் பெறப்படுவது மிக முக்கியமானதாகும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரின் வீட்டிலிருந்துதான் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், தங்கக் கட்டிகளும், இதர விலை உயர்ந்தப் பொருட்களும் மீட்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS