பெட்டாலிங் ஜெயா, மார்ச்.17-
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தங்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய இரண்டு அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு சிறைச்சாலை இலாகாவைக் கட்டாயப்படுத்தும் வழக்கு ஒன்றை, இரண்டு சொஸ்மா கைதிகள் தொடுத்துள்ளர்.
இந்த பூர்வாங்க வழக்கு விசாரணையை 16 வயதுடைய அந்த இரு கைதிகளும் மலேசிய சிறைச்சாலை இலாகாவின் தலைமை இயக்குநர், சுங்கை பூலோ சிறைச்சாலை இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய மூன்று தரப்பினருக்கு எதிராக தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு மனு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக அந்த இரு கைதிகளின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் சுங்கை பூலோ சிறைச்சாலையில் 32 சொஸ்மா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி நெருக்குதல் அளித்த அந்த சிறைச்சாலை அதிகாரிகள், கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத்தன்று இரவில் தங்களைக் கண்மூடித்தனமாக அடித்து, காயப்படுத்தியதாக A. கோகிலன் மற்றும் M. தினேஷ்குமார் என்ற இரண்டு சொஸ்மா கைதிகளும் தங்கள் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியொரு தாக்குதல் நடக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்த போதிலும், இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு அதிகாரிகளின் பெயர்களையும் சிறைச்சாலை இலாகா அம்பலப்படுத்த வேண்டும் என்று அவ்விருவரும் தங்கள் வழக்கு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அந்த சிறைச்சாலை அதிாகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களின் பெயர்கள் அவசியமாகிறது என்று கோகிலனும், தினேஷ்குமாரும் தங்கள் வழக்கு மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இவ்வழக்கு வரும் மார்ச் 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.