பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-
தானும் 13 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்தார். சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த BERA நாடாளுமன்ற உறுப்பினரான அவர், அது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி என்றும், பாரிசான் நேஷனல் நிகராளிகளுக்கு இடையிலான நல்லுறவை உடைத்துச் சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் விவரித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க அவர் விரும்பவில்லை என்றும், ஆனால் இவ்விவகரம் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து பரவுவதைக் கண்ட பிறகு பதிலளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார். அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் மீது, இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சில நடவடிக்கைகள் மூலம், பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவையும் காண முடியும் என்று அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான அவர் கூறினார்.
கடந்த மார்ச் 17 ஆம் தேதி அன்று, 14 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டதாக பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் ஸாம்ரி அப்துல் காடீர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மக்கள் நிகராளிகளிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சி என்று அவர் கூறினார்.