நீலாய், மார்ச்.26-
நெகிரி செம்பிலான், நீலாய், குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 29-வது விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை, மிக விமரிசையாக நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு sun shine நிறுவனத்தின் உரிமையாளர் வின்செண்ட் மரியதாஸ் சிறப்பு வருகைப் புரிந்து பள்ளியின் போட்டி விளையாட்டை திறந்து வைத்து உரையாற்றினார்.

கல்வியும் விளையாட்டுகளும்தான் ஒரு மாணவனை முழுமையடைய செய்யும். அந்த வகையில் மாணவர்கள் அனைவருக்கும் தனித் திறமை ஒன்று நிச்சயம் இருக்கும் எனவும், தன்னை அடையாளப்படுத்த உதவியது விளையாட்டு என்றும் மரியதாஸ் தனது உரையில் கூறினார்.

அம்பு எய்தல் பயிற்றுனர் பூபாலன் பரமசிவம் உரையாற்றுகையில், குபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகத் தாம் இலவசப் பயிற்சி வழங்க முன் வருவதாக அறிவித்தார். அம்பு எய்தல் விளையாட்டு தமிழர்களின் மரபணுவிலேயே ஒட்டி இருப்பதால், இத்துறையில் முறையான பயிற்சிகள் பெற்றால் இந்தியர்கள் சிறந்து விளங்க முடியும் என பூபாலன் கூறினார்.
பள்ளியின் அம்பு எய்தல் விளையாட்டு அறிமுகம் செய்யும் நிமித்தமாக GS Tamilan Riders குழுமம் பள்ளிக்கு ரிங்கிட் மலேசிய 3600 வெள்ளியை நன்கொடையாக கொடுத்து உதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி தமிழ்ச்செல்வி பேசுகையில், ஆசிரியர்களின் உழைப்பு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரவணன் மற்றும் அவர்தம் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, பள்ளி வாரியத்தின் தலைவர் டத்தோ சேகர் ராமன் மற்றும் அவர்தம் குழுவினர் , முன்னாள் மாணவர்கள் ரமேஷ் மோகன் ஆகியோரின் ஆதரவும் இல்லாமல் பள்ளியின் இப்போட்டி விளையாட்டு சிறப்பாக நடைபெற சாத்தியம் இல்லை என்றார்.

சிரம்பானில் உள்ள தாமான் தியாரா செண்டாயான் மற்றும் பாயு சுதெரா பகுதிகளில் வாழும் மக்கள், தங்களின் பிள்ளைகளை குபாங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பதிவுகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிறிய பள்ளியாக இருப்பினும், போட்டி விளையாட்டில் அனைத்து போட்டிகளும் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டது. நேர் ஓட்டம் , அஞ்சல் ஓட்டம், அழைப்புப் பள்ளி ஓட்டம், குழு விளையாட்டுகள் என மிக விமரிசையாக குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
