சியோல், மார்ச்.26-
தென் கொரியாவின் சான்சியாங்க் மாவட்டத்தில் நிலவும் மோசமான வறண்ட வானிலை காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளது. ஐந்து நாட்களைக் கடந்தும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. உய்சங் பகுதியில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவில் தீயில் முழுமையாகச் சேதமடைந்தது.
பலத்த காற்று மற்றும் உஷ்ணமான நிலை காரணமாக, தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்த வரும் அதே வேளையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அண்டாங் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 10,000க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.