கோவில் அருகில் பள்ளிவாசலைக் கட்டுவது ஏற்புடையது அல்ல – பெர்லிஸ் முப்தி ஆலோசனை

கோலாலம்பூர், மார்ச்.27-

கோயிலும், பள்ளிவாசலும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்தில் வீற்றிருப்பது ஏற்புடையது அல்ல என்று பெர்லிஸ் சமய அறிஞரும், முப்தியுமான டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் ஆலோசனை கூறியுள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு பினாங்கு, ஜெலுத்தோங், கம்போங் ராவா, ஜாலான் பாதானியில் சுமார் 20 மீட்டர் இடைவெளியில் கோவிலும், பள்ளிவாசலும் வீற்றிருந்ததால் இரு மதத்தினருக்கு இடையில் நிலவிய கருத்து வேறுபாடு மிகப் பெரிய பதற்ற நிலைக்கு வித்திட்டது.

அதிகாலையில் கோவிலின் மணியோசை ஒலி மற்றும் பள்ளிவாசலில் ஒலிபெருக்கி வழி தொழுகை ஆகியவை பதற்றத்தை ஏற்படுத்தி, இரு சமயத்தவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமானது.

ராஜ- ராஜ மதுரை வீரன் ஆலயத்தினரும், அருகில் உள்ள பள்ளிவாசல் தரப்பினரும் மோதிக் கொண்ட சம்பவம் 27 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதை யாரும் மறந்து விட முடியாது.

அது போன்ற சூழல் மீண்டும் கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழாமல் இருப்பதற்கு கோவில் விவகாரத்தில் சுமூகமான தீர்வு என்ற பெயரில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னைக்கு அல்லது பதற்றத்திற்கு இப்போது வித்திட வேண்டாம் என்று பெர்லிஸ் முப்தி டாக்டர் முகமட் அஸ்ரி ஆலோசனை கூறினார்.

130 ஆண்டு கால பழமை வாய்ந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் வீற்றிருந்த இடத்தில் மடானி பள்ளிவாசல் நிறுவப்படுவதற்கு வழிவிடும் வகையில் அந்த ஆலயத்தை அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் இட மாற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கையில் டாக்டர் மாஸா என்று சுருங்க அழைக்கப்படும் பெர்லிஸ் முப்தி மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS