ரந்தாவ், மார்ச்.27-
மாண்புமிகு திரு. வீரப்பன் சுப்ரமணியம் கடந்த 25 ஆம் தேதி பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 51 ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பள்ளிக்கு மூவாயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.



அக்கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய ரெப்பா சட்ட மன்ற உறுப்பினருமான வீரப்பன், பள்ளியில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்ளும் பள்ளி மற்றும் பெற்றோர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டிருந்தாலும், பள்ளி மற்றும் அதன் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றாரவர்.



இவ்வேளையில் பொது உயர்க்கல்விக் கழகத்திற்கான ஆயிரம் ரிங்கிட் உதவிநிதி, நெகிரி செம்பிலான் அறக்கட்டளையின் மடிக்கணினி உதவி, பள்ளி பராமரிப்பு நிதி மற்றும் பள்ளி நிதி உள்ளிட்ட கல்வி தொடர்பான நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் முன்முயற்சிகளையும் வீரப்பன் விளக்கினார். அதோடு தாய்மொழியுடன் தேசிய மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

பள்ளி பராமரிப்புக்காக கல்வியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் மூலம் நிதியுதவி பெறுவதற்கு வீரப்பன் உறுதியளித்தார். அக்கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.எஸ்.குணசீலன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி.கே.கவிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
