தரைவழி முருகவேல் யாத்திரை: இரு இந்திய சகோதரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவீர்

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

ஆசியச் சாதனைப் புத்தகம் மற்றும் தேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பத்துமலையிலிருந்து இமயமலை, கைலாயத்திற்கு, கார் மூலம் 57 நாட்கள் தரைவழி முருகவேல் யாத்திரையை மேற்கொண்டுள்ள, இரு இந்திய சகோதரர்களுக்கு, மக்கள் முழுமையான ஆதரவை நல்க வேண்டும் என்று கல்விமானும், மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவருமான டாக்டர் R. சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

36 வயது G. பத்மநாபன் மற்றும் 29 வயது G. கார்த்திகேயன் ஆகிய இரு சகோதரர்கள், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி காலையில் தங்கள் முருகவேல் யாத்திரைப் பயணத்தைத் தொடங்கி விட்டனர்.

காலை 9 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் 3 அடி நீளம் கொண்ட முருகவேலைப் பெற்றுக் கொண்டு, அதனைக் காரில் வைத்து, தங்களின் யாத்திரைப் பயணத்தைத் தொடங்கினர்.

பத்துமலையிலிருந்து புக்கிட் காயூ ஹித்தாம் வழியாக தாய்லாந்து, லாவோஸ் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியான மவுண்ட்போஃர்ட் வழியாக இமயமலை, கைலாயத்தைச் சென்றடைய இரு சகோதரர்களும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் நான்கு நாள் தங்கியப் பின்னர் தங்கள் பயணத்தைத் தொடர்வர்.

கைலாயத்தைச் சென்றடைந்த பின்னர் அங்கே முருகவேல் வைத்து, முருக வழிப்பாட்டை நடத்தியப் பின்னர் அந்த வேலை மீண்டும் பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டு வந்து ஒப்படைப்பர்.

வரும் மே 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறும் இச்சகோதரர்களின் 57 நாட்கள் முருகவேல் யாத்திரைப் பயணத்திற்கு மொத்தம் 87 ஆயிரத்து 631 ரிங்கிட் செலவுத் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காருக்கு பெட்ரோல், தேய்மானம், தங்கும் இடம், வழிகாட்டிக் கட்டணம் ஆகியவை இந்த செலவினத்தில் அடங்கும். இந்த சகோதரர்களின் யாத்திரைப் பயணம், சவால் மிகுந்தது என்றாலும் சாதிக்கத் துடிக்கும் இவ்விரு சகோதரர்களின் பயணத்திற்குப் பொது மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

அண்மைய சர்ச்சையில் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி சிலர் தவறான வியாக்கியானம் செய்து வருகின்றனர்.

எனவே இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் முருகப் பெருமானின் சிறப்புகளை அறிந்து கொள்வதற்கும், முருகன், வேல் மற்றும் கைலாயம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சிவன், பார்வதி, முருகன் ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் பற்றி அறிவதற்கும் இரு சகோதரர்களின் முருகவேல் யாத்திரைப் பயணம் பெரும் துணைப் புரியும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

பத்மநாபன் மற்றும் கார்த்திகேயன் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்திற்கு உதவிக் கரம் நீட்டி, ஆதரவு நல்குவது சமுதாயத்தின் கடமையாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் விவரித்தார்.

இவ்விரு சகோதரர்களின் முருகவேல் யாத்திரைப் பயணத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புகின்றவர்கள் திரையில் காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.

அதேவேளையில் இந்த சகோதரர்களின் சாதனைப் பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோர் Sivas_916 ( சிவாஸ் Underscore 916) என்ற Tik Tok கணக்கில் வலம் வரலாம் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

Screen

PADMA NATHAN PILLAI A/L GANASA MOORTHY
MAYBANK 11483303541
018- 9161919

WATCH OUR LATEST NEWS