லண்டன், ஏப்ரல்.08
யுஏஃபா வெற்றியாளர் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தில் ஆர்செனல் ரியல் மெட்ரிட்டுடன் களம் காண்கிறது. நாளை அதிகாலை நடைபெறும் அவ்வாட்டத்தில் நீண்ட நாள் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆர்செனலின் மத்தியத் திடல் வீரர் புகாயோ சாக்கா களமிறங்கவிருக்கிறார். அவர் கடந்த மூன்று மாதங்களாக காயத்தால் அவதியுற்று வந்தார்.
சாக்கா தற்போது பூரண குணமடைந்திருப்பதாகவும் ஆர்செனலின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க உறுதி பூண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பருவத்தில் அவர் இதுவரை அனைத்து போட்டிகளிலும் 26 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அவற்றில் அவர் பத்து கோல்களைப் போட்டுள்ளார். 14 கோல்களை அடிக்க உதவியுள்ளார். நிர்வாகி மிகேல் ஆர்த்தேத்தா தலைமையிலான அணியில் சாக்கா மிகவும் செல்வாக்கு மிகுந்த ஆட்டக்காரராகத் திகழ்கிறார்.
இவ்வேளையில் காலிறுதிச் சுற்றின் மற்றொரு முதல் கட்ட ஆட்டத்தில் இண்டர் மிலான், பாயன் மூனிக்கை எதிர்கொள்கிறது. பாயன் சொந்த அரங்கில் விளையாடுவதால் முடிவு அதற்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. எனினும் இத்தாலி சிரி ஆவில் பல பொருந்திய அணியான இண்டர் மிலானை வீழ்த்த பாயன் சற்று சிரமத்தை எதிர்நோக்கலாம்.