மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தனர் ஆன்மீகப் பயணப் பங்கேற்பாளர்கள்

மாரான், ஏப்ரல்.10-

மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை நோக்கி நான்கு நாட்கள், கிழக்கை நோக்கிய ஆன்மீக நடைப் பயணத்தை மேற்கொண்ட, கிளப் மரத்தோன் மாரான், பங்கேற்பாளர்கள், 204 கிலோ மீட்டரைக் கடந்து, இன்று காலை 8.00 மணியளவில் வெற்றிகரமாக ஆலயத்தைச் சென்றடைந்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்திலிருந்து மாரானை நோக்கி அதிகமான பங்கேற்பாளர்கள் தங்கள் நெடும்பயணத்தைத் தொடங்கினர்.

தங்களின் பயணத்தின் நான்காவது நாளான இன்று வெள்ளிக்கிழமை, அதிகாலை 3.30 மணியளவில் மாரான், ராக்கான் மூடா மண்டபத்திலிருந்து ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை நோக்கி நடைப் பயணத்தை உற்சாகமிக்கச் சூழலில் தொடங்கினர்.

ஆலயத்தை நோக்கி தாங்கள் முன்னெடுத்த ஒவ்வோர் அடியும், மரத்தாண்டவரை இலக்காகக் கொண்டு, நேர்த்திக் கடனைச் செலுத்தும் விதமாக இருந்தது என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் கோவிலைச் சென்றடைந்தது, ஒருபோதும் மறக்க முடியாத ஒரு தருணமாகும். இந்த 204 கிலோ மீட்டர் நடைப் பயணம் மிகுந்த சவால் நிறைந்தது. அதனை நிறைவுச் செய்ததில் அனைவரும் மிகுந்த மனைநிறைவு கொண்டுள்ளனர் என்று கிழக்கை நோக்கிய இந்த ஆன்மீகப் பயணத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய கல்வி மானும், மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவருமான டாக்டர் R. சிவபிரகாஷ் தெரிவித்தார்.

அனைவரும் பயப்பக்தியுடன் ஆலய வளாகத்தில் நீராடியப் பின்னர், நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக முடிக்காணிக்கை செய்து, பால் குடம் ஏந்தி, ஸ்ரீ மரத்தாண்டவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இந்த ஆன்மீக பெருநடைப் பயணம் , எவ்வித தடங்களின்றி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பங்கேற்பாளர்களின் திடமான மன உறுதி மற்றும் ஸ்ரீ மரத்தாண்டவரின் அருளாசியாகும். இந்தப் பயணம் , வெறும் உடல் சகிப்புத்தன்மை பற்றியது மட்டுமல்ல, மாறாக, மன உறுதி, விடாமுயற்சி மற்றும் குழுப்பணி பற்றியது என்றார் டாக்டர் சிவபிரகாஷ்.

WATCH OUR LATEST NEWS