கோலாலம்பூர், ஏப்ரல்.10-
2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடியை இடம் பெறச் செய்ய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுக்மா போட்டியில் கபடியும் சிலம்பமும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ நிகழ்ச்சியொன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
எனினும் அடுத்தாண்டுக்கான சுக்மா போட்டியில் கபடி இடம் பெறாதது தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக மலேசிய கபடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏஎஸ்பி அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 2026 சுக்மா போட்டியில் கபடி சேர்த்துக் கொள்ளப்பட தாங்கள் உரிய முயற்சியையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கபடியைத் தொடர்ந்து சுக்மா போட்டியில் இடம் பெறச் செய்ய விளையாட்டுத்துறையை அணுகி வருவதாகவும் அருள் பிரகாஷ் கூறினார். அம்முயற்சிக்கு பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.