பொய் கூறியதால் மகளைக் கொலை செய்த தாய்

பெங்களூரு, ஏப்ரல்.11-

பெங்களூருவில் தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த நிலையில், 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக, பொய் கூறியதால் மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கணவர் இறந்ததைத் தொடந்து 59 வயதான பத்மினி ராணி எனும் மாது 17 வயது நிரம்பிய தனது மகள் சாகிதி சிவபிரியாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான, பி.யு.சி., தேர்வு முடிவில் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக தாயிடம், மகள் கூறி இருந்தார்.

பின், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்ததாகவும், அதற்கு காரணம் நீங்கள்தான் என்று கூறி தாயை, மகள் திட்டி உள்ளார். ஆனால் ஒரு பாடத்தில் அல்ல நான்கு பாடங்களில் சிவபிரியா தோல்வி அடைந்தது தெரிந்தது. இதுபற்றி பத்மினி கேட்ட போது சரியாக பதில் சொல்லவில்லை.

கோபம் அடைந்த பத்மினி சமையல் அறையில் இருந்த, இரண்டு கத்திகளை எடுத்து வந்து சிவபிரியாவைச் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின், தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின் பனசங்கரி போலீசார் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பத்மினிக்கு ஆயுள் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS