மாரான், ஏப்ரல்.12-
மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர் P. ராமன் மற்றும் அவர் தலைமையிலான நிர்வாகத்தினரால் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் திரண்டனர்.
இவ்வாண்டு அதிகமான காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி, பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தியதாக ராமன் குறிப்பிட்டார்.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஆலய நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார், முதல் முறையாக சிறப்பு வருகை புரிந்தார்.

டத்தோ சிவகுமாருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் தலைவர் பி. ராமன், பூர்ண மரியாதை வழங்கி சிறப்பித்தார். டத்தோ சிவகுமார் தமது உரையில், பத்துமலைத் தைப்பூச விழாவிற்கு அடுத்து பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் திரளும் திருத்தலமாக விளங்குவது மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம்தான் என்று புகழாரம் சூட்டினார்.
பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்கள் இறைபக்தியுடன் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி வருவதைப் பார்க்கும் போது, பி. ராமன் தலைமையிலான ஆலய நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு ஓர் அங்கீகாரமாகும். இவ்வேளையில் ராமன் தலைமையிலான ஆலய நிர்வாகக் குழுவிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா சிறப்பதற்கு தன்னார்வ அடிப்படையில் மருத்துவச் சேவையை வழங்கிய மருத்துவக் குழுவினருக்கும் டத்தோ சிவகுமார் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
பகாங் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்து, ஓர் இந்திய மருத்துவர், இத்திருவிழாவிற்குச் சேவையை வழங்க முன்வர வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், கடந்த மூன்று நாட்களாக கண்விழித்து, பக்தர்களுக்கும், வருகையாளர்களுக்கும் உரிய மருத்துவச் சேவையை வழங்கி வந்த இந்திய மருத்துவக் குழுவினரின் அயராதப் பணி, போற்றத்தக்கதாகும் என்று டத்தோ சிவகுமார் புகழாரம் சூட்டினார்.