நெகிரி செம்பிலான் ஆலயங்கள் சொந்த நிலத்தில் உள்ளனவா? – வீரப்பன் கேள்வி

சிரம்பான், ஏப்ரல்.12-

நெகிரி செம்பிலானில் உள்ள இந்து ஆலயங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதுடன், நிலப் பிரச்சனைகள் தொடர்புடைய சிக்கல்களை விவாதித்து களையும் நோக்கில், நெகிரி செம்பிலான் மாநில இந்து சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்து ஆலயங்களை வளப்படுத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

பிரதமர் துறை சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கனின் சிறப்பு வருகையுடன் மலேசிய இந்து சங்கத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன், மலேசிய இந்து சங்கத்தின் பொருளாளர் இரா. பெருமாள், நெகிரி செம்பிலான் மாநில இந்து சங்கத் தலைவர் சிவ ஸ்ரீ அனந்த கோபி, நெகிரி செம்பிலான் அரசாங்க துறை அதிகாரிகள் ஆகியோரும் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

நெகிரி செம்பிலான் மாநில இந்து வழிபாட்டு மன்றங்களின் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கோவில்கள், சொந்த நிலத்தில்தான் உள்ளனவா? என்பது குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நிலப் பிரச்னை தொடர்பாக, எதிர்காலத்தில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாமல் இருக்க அந்தந்த ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், தங்கள் ஆலயம், சொந்த நிலத்தில் உள்ளதா? அரசாங்க நிலத்தில் உள்ளதா? அல்லது தனியார் நிலத்தில் உள்ளதா என்பது குறித்து முதலில் உறுதி செய்து கொள்ளுமாறு வீரப்பன் கேட்டுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பதிவு பெற்ற ஆலயங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய வீரப்பன், ஆலயம் தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்கு மற்றொரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தமது உரையில் குறிப்பிட்டடார்.

முன்னதாக, மத நடவடிக்கைகள், சமூக நலன் மற்றும் இந்து சமூகம் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பலதரப்பட்ட பரிந்துரைகள் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் நெகிரி மாநில வழிபாட்டு மன்றங்களின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS