கெப்பாளா பாத்தாஸ், ஏப்ரல்.14-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையத்தில் பாதுகாவலர் அறையில் போலீஸ்காரர் ஒருவர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொண்டதற்கு சொந்தப் பிரச்னையே காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணையில் இவ்விவகாரம் தெரியவந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் ஒன்பது பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் பெயரை போலீஸ் துறை வெளியிடவில்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவலின்படி உயிரிழந்த போலீஸ்காரர் 58 வயது பிரான்சிஸ் அற்புதம் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.