சிரம்பான், ஏப்ரல்.15-
சிரம்பானில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் கும்பல் ஒன்றினால் ஆடவர் ஒருவர் வெட்டுக் கத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்தது. அந்த பேரங்காடி மையத்தில் புகைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஓர் இடத்தில் அமர்ந்து புகைத்துக் கொண்டு இருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை, மின்படிகட்டின் வாயிலாக ஓடி வந்த கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹாத்தா சீ டின் தெரிவித்தார்.
அந்த கும்பலில் ஒருவன் வெட்டுக் கத்தியை வைத்திருந்தான் என்று சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா பதிவின் மூலம் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நபர் தாக்கப்படுவதை நேரில் கண்ட அவரின் நண்பர்கள் ஓடி வந்த போது, அந்தக் கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. அதன் பின்னர் கடும் காயத்திற்கு ஆளான நபர், நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டு கைகளிலும் வலது காலிலும் ஆழமான வெட்டுக் காயங்களுக்கு ஆளான அந்த நபரின் உடல் நிலை, தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி ஹாத்தா குறிப்பிட்டார்.