மூசாங் கிங் டுரியான் தோட்ட விவகாரம் – பேச்சுவார்த்தை வழி தீர்வு காண்போம்

ரவூப், ஏப்ரல்.15-

வளமான நில அமைப்பாக விளங்கும் ரவூப் மூசாங் கிங் டுரியான் தோட்ட நில விவகார சர்ச்சையைப் பேசி தீர்வு காண்பதற்கு ரவூப் எம்.பி. சோவ் யூ ஹுய், பகாங் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

200 – க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்களை வெட்டிச் சாய்த்த பகாங் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ரவூப் டுரியான் மரங்களை நடவு செய்த உள்ளூர்வாசிகளின் அமைப்பான சம்காவின் தலைவரான சோவ் யூ ஹுய் நேற்று கைது செய்யப்பட்டார்.

அரசு பணியாளர்கள் கடமையாற்ற விடாமல் தடுத்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட சோவ் யூ ஹுய், இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரவூப் எம்.பி. என்ற முறையில் இந்த விவகாரத்தை மாநில அரசாங்கத்துடன் பேசி, தீர்வு காண தாம் விரும்புவதாக சோவ் யூ ஹுய் குறிப்பிட்டார்.

தாங்கள் நடவு செய்த டுரியான் மர தோட்டங்களுக்குத் தற்காலிக நிலப் பட்டா மற்றும் பெர்மிட் கேட்டு கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக உள்ளூர்வாசிகள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாநில அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இவ்விவகாரத்தில் பெரிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்ற போதிலும் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர்வாசிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சோவ் யூ ஹுய் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS