கோலாலம்பூர், ஏப்ரல்.15-
காலஞ்சென்ற துன் அப்துல்லா அகமட் படாவி, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதில் முரண்டு பிடிக்கவில்லை.மாறாக, தன்னிச்சையாக பதவி விலகிய ஒரு சிறந்த பண்பாளர் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது புகழாஞ்சலி சூட்டினார்.
அப்துல்லா ஒரு முன்னுதாரணத் தலைவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடந்த 1968 ஆம் ஆண்டு ஒரு பேரங்காடி மையத்தில் அவரைத் தாம் சந்தித்ததாக துன் மகாதீர் நினைவுகூர்ந்தார்.
இன்று காலையில் அப்துல்லா அகமட் படாவியின் நல்லடக்கச் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.
அப்துல்லாவை நினைவுகூரத்தக்க விஷயம் என்னவென்றால், 2009 ஆம் ஆண்டில் அவர் பதவி விலகியதைச் சொல்லலாம். எந்தவொரு எதிர்ப்பு தெரிவிக்காமலேயே மிக கெளரவமாக அவர் பதவி விலகியது தம்மை மிகவும் கவர்ந்ததாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் 2003 ஆம் ஆண்டில் பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டுத் தாம் பதவி விலகிய பின்னர் அடுத்த ஓராண்டிலேயே நடைபெற்ற 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற இடங்களில் 90 விழுக்காட்டுத் தொகுதிகளைக் கைப்பற்றி, அவர் சாதனைப் படைத்தது தம்மை பிரமிக்க வைத்ததாக துன் மகாதீர் தெரிவித்தார்.
எனினும் அதன் பின்னர் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது நிறையப் பிரச்னைகளை எதிர்நோக்கினார். இதன் காரணமாகவே அடுத்து நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவரின் நிர்வாகத் திறன் பாதிக்கப்பட்டதாக துன் மகாதீர் நினைவுகூர்ந்தார்.