கோலாலம்பூர், ஏப்ரல்.15-
பல்வேறு இன, மத சமூகங்கள் அமைதியாக வாழக்கூடிய ஒரு நாடாக மலேசியா உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பல்லின சமூகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மத-இனங்களுக்கிடையேயான உரையாடல் மூலம் அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
மலேசியா தனித்துவமான நிலையில் உள்ளது. சவால்களும் பதற்ற நிலைகளும் இருந்தாலும், நாம் ஒரு சமூகமாக ஒன்றாக வாழ முடிகிறது. மற்ற இனங்களை அதிகமாக சகித்துக் கொள்வதாலோ அல்லது அதிகமாக நட்புடன் இருப்பதாலோ நாம் தோல்வியடைய மாட்டோம். ஊழல், அதிகார முறைகேடல், நம்பகத்தன்மையற்ற தலைவர்களை நாம் அனுமதிக்கும்போதுதான் தோல்வியடைகிறோம் என்றார் அவர். கல்வி முறை சகிப்புத்தன்மை, நீதி போன்ற நல்லொழுக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் ‘நாகரிக உரையாடல் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பன்னாட்டு நாகரிக உரையாடல் மாநாட்டை தொடக்கி வைப்பதற்கு முன்பு அவர் இவ்வாறு கூறினார். உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர், பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி ஹாசான், இளைஞர்-விளையாட்டு துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு, நிலையான வளர்ச்சியின் நெறிமுறை அடிப்படைகள் பற்றிய புரிதலை வளர்ப்பது, கல்வித்துறை, கொள்கை வகுப்பாளர்கள், பெருநிறுவனத் துறை ஆகியவை உள்ளடக்கிய செயல் திட்டங்களை வகுப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குவது, சுற்றுச்சூழல், சமூக – நிர்வாகக் கொள்கை, சுழற்சி முறை பொருளாதாரம், நகர திட்டமிடல் போன்ற துறைகளில் சிறந்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகியவற்றை நோக்கங்களைக் கொண்டுள்ளது.