கோலாலம்பூர், ஏப்ரல்.18-
வரும் மே 28 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஜாம்பவானான மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ் அணிகளுக்கும் இடையேயான நட்பு முறை கால்பந்தாட்டம் நடைபெறுகிறது. அவ்வாட்டத்திற்கான கிட்டத்தட்ட 45,000 டிக்கெட்டுகள் இதுவரை விற்றுத் தீர்ந்துள்ளன.
யூரோப்பா லீக் காலிறுதிப் போட்டியில் யுனைடெட் அணி வியத்தகு வெற்றியைப் பெற்ற நிலையில், ரசிகர்களின் வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக புரோஈவென்ட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் காம் கூறினார்.
இதுவரை வரவேற்பு மிகவும் நன்றாக உள்ளது. டிக்கெட் விற்பனை கிட்டத்தட்ட 45,000 த்தை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வைக் காண அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறினார்.
குறிப்பாக யூரோப்பா லீக் காலிறுதிப் போட்டியில் யுனைடெட்டின் அபார ஆட்டத்திற்குப் பிறகு, ரசிகர்கள் திரளாக வருவதற்கு உற்சாகமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆசியான் ரசிகர்களும் அங்கு வருவார்கள். எனவே டிக்கெட்டுகளை உடனடியாக வாங்கிக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.