தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் AI தொழில்நுட்பம்

கோலாலம்பூர், ஏப்ரல்.18-

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கல்வி மற்றும் தலைமைத்துவத்தில் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வரங்கு ஒன்று கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு புக்கிட் ஜாலில், ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப்பிரிவு, STS ICT Consultant நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதிவுக்குப் பிறகு தொடங்கிய இந்த ஆய்வரங்கில் ஆசிய பசிபிக் பல்லைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை முதிர்நிலை விரிவுரையாளர் டாக்டர் செல்வகுமார் சாமுவேல், கல்வி மற்றும் பள்ளித் தலைமைத்துவத்தில் AI இன் நோக்கங்கள் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

முதல் அங்கத்தில் ஆசிய பசிபிக் பல்லைக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி குர்பர்டிப் சிங் சிறப்புரையாற்றினார்.

பள்ளித் தலைமைத்துவத்தில் AI இன் பங்கு மற்றும் முடிவெடுப்பதில் ஏற்படக்கூடிய மாற்றம், நிர்வாகத் திறன், AI-சார்ந்த பள்ளி மேம்பாட்டு உத்திகள், கொள்கைத் திட்டமிடல், செயல்திறன் கண்காணிப்பு மற்றும் நிறுவன வளர்ச்சி குறித்து குர்பர்டிப் சிங் விவரித்தார்.

காலைச் சிற்றுண்டி இடைவெளிக்குப் பிறகு காலை 10.45 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அங்கத்தில் STH ICT CONSULTANT (M) SDN.BHD நிறுவனத்தின் தோற்றுநர் திருமதி திலகவதி பாலசந்திரன் நிகழ்விற்குத் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

ஐ.சி.டி மற்றும் AI செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு மற்றும் வகுப்பறையில் மாணவர் மத்தியில் அவை குறித்து ஆர்வத்தைத் தூண்டுதல் முதலியவை பற்றி திலகவதி விவரித்தார்.

மேலும் இலக்கவியல் யுகத்தில் வலுவான கல்வித் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தவிர தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகத்தை பலப்படுத்தக்கூடிய AI மற்றும் ICT சாதனங்களின் பயன்பாட்டு முறை குறித்தும் திலகவதி விரிவாக விளக்கினார்.

ஒட்டு மொத்தத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இலக்கவில் பற்றிய மனநிலையை ஊக்குவிக்கும் களமாக இந்த ஆய்வரங்கு மிக ஆக்கப்பூர்வமாக அமைந்தது.

WATCH OUR LATEST NEWS