இங்கிலாந்து, ஏப்ரல்.28-
லிவர்பூல் 20 ஆவது முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை உறுதிச் செய்துள்ளது. அதன் வாயிலாக அவ்வணி 20 முறை அக்கிண்ணத்தை வென்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட்டின் சாதனைச் சமன் செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டோட்டன்ஹாமை 5க்கு 1 என்ற கோல்களில் வீழ்த்தி லிவர்பூல் இப்பருவக் கிண்ணத்தைத் தன் வசமாக்கியது. இப்பருவத்தில் இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், 20 ஆவது கிண்ணத்தை வெல்ல லிவர்பூலுக்குத் தேவைப்பட்டது ஒரு புள்ளி மட்டுமே.
அவ்வாட்டத்தில் டோட்டன்ஹாம் முதல் கோலைப் போட்டு லிவர்பூலை அதிர்ச்சியடைய வைத்தது. அதனை அடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கிய லிவர்பூல் அதிரடியாக விளையாடத் தொடங்கியது. அவ்வகையில் அது அடுத்தடுத்து ஐந்து கோல்களைப் புகுத்தியது. அவ்வெற்றியின் மூலம் லிவர்பூல் இப்பருவத்தில் 34 ஆட்டங்கள் வழி 82 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்தது.
1980 ஆம் ஆண்டுகளில் கால்பந்து ஜாம்பவானாக வலம் வந்த லிவர்பூல், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 20 ஆவது முறையாக ஈபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது. இது அவ்வணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.