தெலுக் இந்தான், ஏப்ரல்.30-
தெலுக் இந்தான், பாத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் அப்பள்ளியின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங்கும் இணைந்து பாத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.
இரவு நேரமாக இருந்த போதிலும் நல்ல வெளிச்சம் தரும் வகையில் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டதன் வாயிலாக பள்ளி தற்போது பிரகாசமாக உள்ளது.
வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கு சாலையின் இரு பகுதிகளிலும் வேக வரம்பு மேடு அமைக்கப்பட்டுள்ளன. தெளிவாகப் பார்க்கும்படி சாலைக் கோடுகள் இடப்பட்டிருப்பதுடன், அறிவிப்புப் பலகையும் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு இரு பகுதிகளிலும் ஸெப்ரா கோடுகள் இடப்பட்டுள்ளன. மாணவர்கள் கடக்கும் போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு பாதுகாப்பு வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள் யாவும் பாத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பாதுகாப்புப் பிரச்சைனைக்குத் தீர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ங்கா கோர் மிங்கும், வூ கா லியோங்கும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.