கோவில் நிலப் பிரச்னைக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுங்கள்

கோலாலம்பூர், மே.02-

நாட்டில் இன்னும் பதிவு செய்யப்படாமல், நில சர்ச்சையை எதிர்நோக்கி உள்ள பழமை வாய்ந்த ஆலயங்களைப் பாதுகாக்கவும், அவற்றைப் பதிவு செய்யவும், நில சர்ச்சைக்குத் தீர்வு காணவும் அந்தந்தப் பகுதியில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும், உதவியையும் நாடுமாறு ஆலயப் பொறுப்பாளர்களுக்கு மலேசிய இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க சார்பற்ற NGO தலைவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ள ஆலய, நில விவகாரங்களைத் தீர்க்கக்கூடிய அதிகாரம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்று டத்தோ சிவகுமார் சுட்டிக் காட்டினார்.

தேசிய நிலச் சட்டம் 1965 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த போதிலும் பல ஆலயங்கள் அதற்கு முன்னதாகவே கட்டப்பட்டுள்ளன.

மேம்பாட்டு அலையில் பல தோட்டங்கள் அகற்றப்பட்டு வந்த போதிலும், தங்களின் காவல் தெய்வமாக தோட்ட மக்களுக்குக் காத்து நின்ற பல ஆலயங்கள் இன்னமும் அவ்விடத்தில் உள்ளன.

அந்த ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கருதப்படும் பட்சத்தில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் பொதுத் தேர்தல் வரும் நிலையில் ஆலய நில உரிமையை உறுதி செய்வதற்குச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடுமாறு டத்தோ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

தலைவர்களைக் குறைகூறுவதை விடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடினால் ஆலய நில சர்ச்சைக்குத் தீர்வு காண முடியும் என்று டத்தோ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று மே முதல் தேதி தொழிலாளர் தினத்தில் பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

யார் யாருக்கு மக்கள் வாக்களித்தார்களோ, அந்தந்த தொகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடி, கோவிலுக்கு நிலப்பட்டாவை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்க வேண்டும். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS