ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

சென்னை, மே.03-

செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப் பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, இன்று சனிக்கிழமை காலையில் சென்னை, கட்டாங்குளத்தூர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

தமிழகம் உட்பட மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிசர்லாந்து, மொரிசியஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தருமை ஆதினம் 27- ஆவது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

மலேசியாவிலிருந்து 62 பேர் கொண்ட பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, மாநாட்டின் தொடக்க நாளான இன்று காலை 11.45 மணிக்கு சைவ சித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.

டான்ஸ்ரீ நடராஜாவுடன் அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ மல்லிகா, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ R. S. தனேந்திரன் உட்பட மலேசிய பிரமுகர்கள் பலர், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS