புதுடெல்லி, மே.07-
பாகிஸ்தான் தரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவம் இன்று அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவில் போர்க் கால ஒத்திகை என்று உள்துறை அமைச்சு பிரகடனம் செய்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா இந்தத் தாக்குதலைத் தொடுத்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இலக்காக கொண்டு இந்திய ராணுவ விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தத் தொடங்கியது.
இதில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் வெற்றிகரமாக தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் ( Operation Sindoor ) என்ற பெயரில் இந்தியா மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காமல் நிலைகுலைந்து இருக்கும் பாகிஸ்தான், பதிலடித் தாக்குதல் கொடுப்போம் என்ற சூளுரைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க தயாராகி வருவதாகக் கூறப்படும் இந்தியா, போர் தொடுப்பதற்கு முன்னதாக நாடு முழுவதும் போர்க் கால ஒத்திகையை அறிவித்தது.
இந்த போர்க் கால ஒத்திகையை, தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, நள்ளிரவில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
51 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் கால ஒத்திகையை அறிவித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலை தொடர்ந்து போர் பதற்றம் உச்சக்கட்ட பீதியில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்குடன் கலந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி , முப்படைத் தளபதிகளை அழைத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அமைச்சரவைக் கூட்டமும் இன்று நடைபெறுவதறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய சுற்றுலாப்பகுதியான காஷ்மீர், பஹல்காமில் சுற்றுப்பயணிகளை இலக்காகக் கொண்டு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.