ஜார்ஜ்டவுன், மே.09-
பினாங்கில் பழமை வாய்ந்த ஆலயமான பெனான்தி தோட்ட ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் வீற்றிருக்கும் நிலத்தை வாங்குவதற்கு தேவைப்படக்கூடிய நிதியைத் திரட்டுவது குறித்து ஆலயப் பொறுப்பாளர்களுடன் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கலந்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் ஆம் தேதி பெனான்தி தோட்ட ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு நேரடி வருகைப் புரிந்த டத்தோஸ்ரீ சுந்தராஜு, ஆலயத்தின் தோற்றத்தைக் கண்டு பரவசப்பட்டார்.
இந்தக் கோவில் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, பினாங்கில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க பாரம்பரியத் தளமாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு புகழாரம் சூட்டினார்.
நில சர்ச்சையில் சிக்கிய இந்த ஆலயம், நீண்ட கால வழக்கு விசாரணைக்கு பிறகு தற்போதைய நில உரிமையாளரிடமிருந்து மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் தொகைக்கு கோயில் நிலத்தை வாங்கிக் கொள்ளும்படி நீதிமன்றம் ஓர் ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நிலத்தின் மொத்த மதிப்பில் 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை மாதாந்திர தவணைகளில், 12 மாத காலத்திற்குள் தொகையைத் தீர்க்க அனுமதிக்கும் கட்டண விதிமுறைகளையும் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
முதல் கட்டணம் 50 ஆயிரம் ரிங்கிட், முதல் மூன்று மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று தொகை மற்றும் கால வரம்பை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்தத் தொகையை திரட்டுவது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர், இவ்விகாரத்தை டத்தோஸ்ரீ சுந்தராஜுவிடம் கொண்டு வந்ததன் காரணமாக, ஆலயத்திற்கு நேரடி வருகை புரிந்து நீதிமன்றம் நிர்ணயித்த தொகைக்கு ஏற்ப நிலத்தை வாங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவது குறித்து ஆலயப் பொறுப்பாளர்களுடன் விவாதித்தார்.
பழமை வாய்ந்த வரலாற்றுத் தளத்தைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாத நிலத்தைக் கையகப்படுத்துவதிலும் கோயில் குழுவிற்கு உதவ தாம் முழுமையாக உறுதி பூண்டுள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.