கோலாலம்பூர், மே.09-
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங்கிற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நெருக்குதல் அளித்து இருப்பதுடன், தேவையற்ற விவகாரங்களில் அதன் தலையீடு இருந்துள்ளது என்று வழக்கறிஞரும், மனித உரிமை போராட்டவாதியுமான சித்தி ஸாபேடா காசிம் கூறுகிறார்.
எஸ்பிஆர்எம் விசாரணையில் இருந்த போது 42 வயதுடைய அந்த வர்த்தகப் பெண்மணிக்கு இத்தகைய நெருக்குதலை அந்த ஆணையம் அளித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
எஸ்பிஆர்எம் விசாரணைக்குச் செல்வதாக கூறி, வெளியே சென்ற பமேலா லிங், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஆர்எம் கட்டடத்தில் பமேலா லிங், விசாரணையில் இருந்த போது தனது கணவனுடனான விவகாரத்து பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் ஒருவர், அறிவுறுத்தியிருப்பதாக சித்தி குற்றஞ்சாட்டுகிறார்.
எஸ்பிஆர்எம்மின் இத்தகையச் செயல்கள், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சித்தி குறிப்பிடுகிறார்.