புத்ராஜெயா, மே.10-
அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் ஒன்றை மேம்படுத்துவதற்குப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிறுவன ஒன்றின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்குப் பிரத்தியேமாக வீடமைப்புத் திட்டம் ஒன்றை பேரா, முவாலிம் மாவட்டத்தில் உருவாக்கவிருப்பதாகக் கூறி, அந்த நிர்வாக இயக்குநர் ஒரு வங்கியை ஏமாற்ற முயற்சித்துள்ளார் என்ற புகார் தொடர்பில் அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தற்போது விசாரணை செய்து வருகிறது.
அரசாங்க ஊழியர்களுக்காக அந்த வீடமைப்புத் திட்டம் 10 கோடி ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தேவைப்படக்கூடிய 7 கோடி ரிங்கிட் கடனில் முதல் கட்டமாக 16 லட்சம் ரிங்கிட்டை வங்கியிலிருந்து வெளியாக்க அந்த நிர்வாக இயக்குநர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
60 வயதுடைய அந்த இயக்குநர், நேற்று முன்தினம் புத்ராஜெயாவிற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த நிர்வாக இயக்குநர், புத்ராஜெயா நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் குணசுந்தரி மாரிமுத்து முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை 5 நாட்கள் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.