பிகேஆர் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் போட்டியின்றி தேர்வு

பெட்டாலிங் ஜெயா, மே.10-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்த நிலையில் கட்சியின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து பிகேஆர் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிகேஆர் தலைவராக இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது மூலம், 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்று டாக்டர் ஸாலிஹா குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வேப்புமனுத் தாக்கல் நேற்று முன்னிரவு 11.59 மணியுடன் முடிவுற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக தொகுதிகளிடமிருந்து 251 வேட்பாளர் நியமனங்கள் கிடைத்து இருப்பதாக டாக்டர் ஸாலிஹா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS