ஈப்போ, மே.13
தமக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியின் விவகாரத்தில் தாம் அமைதியைக் கடைப்பிடிக்கப் போவதாக கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ ஆர். ரமணன், கட்சிக்குள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்குத் தடை செய்யும் கட்சி விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார்.
கட்சி விதிமுறைகளின்படி, கட்சி உறுப்பினர்களாகிய நாம் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது என்று மத்திய செயலவைக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமே நேரடியாக ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எனவே கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு எதிராகத் தாம் எதிர்வினையாற்ற கட்சி விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான ரமணன் கூறினார்.
பிகேஆர் போராட்டத்தைப் பற்றி ரமணன் அறிந்திருக்கவில்லை என்றும், கடந்த 2018 ஆம் பொதுத் தேர்தலின் போது, அவர் மஇகாவின் பொருளாளராக இருந்தார் என்றும், சந்தடியின்றி 2020 இல் பிகேஆரில் சேர்ந்தார் என்றும், கட்சிக்குப் புதியவர் என்பதால் அவருக்கு பிகேஆர் கலாச்சாரம் தெரியவில்லை என்றும் ரஃபிஸி ரம்லி கூறியிருப்பது தொடர்பில் ரமணன் பதில் அளித்தார்.
ரஃபிஸி ரம்லியின் கடும் விமர்சனத்தினால் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தம்முடைய தோற்றத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதா? என்று ரமணனைச் செய்தியாளர்கள் வினவிய போது, தாம் புதியவரா அல்லது அனுபவசாலியா என்பது கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியும் என்றார்.