சுபாங் ஜெயா, மே.13-
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள் விருதை தேசிய ஆடவர் பூப்பந்து இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் இக் வென்றுள்ளனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டதற்காக அவர்களுக்கு அவ்விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விருது ஏஎஸ்என்னை வென்றதைத் தொடர்ந்து, அந்த ஜோடி இரண்டாவது முறையாக அந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அது அந்த தேசிய இரட்டையர்களுக்கு மட்டுமின்றி மலேசியப் பூப்பந்து சங்கம் பிஏஎம்மிற்கு மிக உயரிய அங்கீகாரம் என அவ்விருவரையும் பிரதிநிதித்து விருதைப் பெற்றுக் கொண்ட பிஏஎம்மின் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ தெரிவித்தார்.
இவ்வேளையில், சிறந்த வீராங்கனையாக தேசிய மகளிர் திடல் போலிங் வீராங்கனை நோர் ஃபாரா எயின் அப்துல்லா தேர்வானார். நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ஏஎஸ்என்னை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எடுத்து வழங்கினார்.