குட்டி யானை விபத்தில் இறந்ததில் கவனக்குறைவு நடக்கவில்லை

கெரிக், மே.13-

கிழக்கு – மேற்கு கெரிக் – ஜெலி சாலையின் 80 ஆவது கிலோ மீட்டரில் நேற்று அதிகாலையில் கொண்டேனா லோரியில் யானைக் குட்டி ஒன்று, மோதி உயிரிழந்த சம்பவத்தில் எந்தவொரு கவனக்குறைவோ அல்லது அலட்சியப் போக்கோ நிகழவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தனது குட்டி யானை லோரியில் அடியில் சிக்கி உயிரிழந்ததைத் கண்டு அவ்விடத்தை விட்டு நகராமல் சுமார் 12 மணி நேரம் கண் கலங்கிய தாய் யானையின் பாசப் போராட்டம், மக்களின் கவனத்தை ஈர்த்த வேளையில் இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்ளி மாஹ்மூட் தெரிவித்தார்.

அடர்ந்த காட்டுப் பாதையில் அதிகாலை 2.50 மணியளவில் இச்சம்பவம் நிகழும் போது பனி சூழ்ந்த நிலையில் காரிருள் கவ்விக் கொண்டு இருந்ததுள்ளது. தூரப் பார்வை மிக மோசமான அளவிலேயே இருந்துள்ளது.

இந்நிலையில்தான் அந்த குட்டி யானை திடீரென்று சாலையைக் கடக்க முற்பட்ட போது, செய்வதறியாது 28 வயதுடைய லோரி ஓட்டுநர், அந்த குட்டி யானையை மோதுவதிலிருந்து தவிர்க்க இயலவில்லை என்று அவர் விளக்கினார்.

லோரியின் அடியில் சிக்கிக் கிடந்த தனது குட்டி யானையைக் காப்பாற்றுவதற்கு தாய் யானை கடும் முயற்சி மேற்கொண்டும், குட்டி யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மாண்டது.

அந்த குட்டி யானை, அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் வரை தாய் யானை சுமார் 12 மணி நேரம் வரை அவ்விடத்திலேயே காத்திருந்த காட்சியைக் கொண்ட காணொளி, பலரின் நெஞ்சை நெகிழ வைத்தது.

WATCH OUR LATEST NEWS