வலுவான ஆசியான் ஒத்துழைப்புக்கு கோபிந்த் அழைப்பு விடுத்துள்ளார்

கோலாலம்பூர், மே.13-

ஏஐ எனப்படும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு மற்றும் நெறிமுறை தரவு நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த கொள்கைகள் மற்றும் ஒன்று மற்றொன்றுடன் இயங்கக்கூடிய கட்டமைப்புகளை நிறுவுவதற்கு, ஆசியான் உறுப்பு நாடுகளிடையே ஆழமான ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

ஏஐயின் தாக்கம் தேசிய எல்லைகளைத் தாண்டி, முழு பிராந்தியத்தையும் உலகளாவிய நிலப்பரப்பையும் எதிரொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியா தனது சொந்த ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கி வரும் அதே வேளையில், ஒரு விரிவான எல்லை தாண்டிய ஏஐ நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க பிராந்திய ரீதியாக ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளையும் நாடு நாடி வருவதாக கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

தென்கிழக்கு ஆசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிர்வாக மாதிரிகளை இணைந்து வளர்ப்பதில் மலேசியா புதுமைக்கான சோதனைக் களமாகவும், பிராந்திய ஒருங்கிணைப்பாளராகவும், நம்பகமான பங்காளியாகவும் செயல்பட முடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர், பிடபள்யூசியில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் ஏஐ தலைமைத்துவ மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கோபிந்த் சிங், இந்த ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்று இருப்பதை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியா ஏஐ உச்ச நிலை மாநாடு ஒன்றை ஏற்று நடத்தும் என்று அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS