கோலாலம்பூர், மே.13-
தனது தாயாரிடம் 29 லட்சம் ரிங்கிட் பிணைப் பணத்தைக் கோருவதற்காகத் தாம் கடத்தப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவனும், அவனுடைய நண்பரும் நாடகமாடி மோசடி செய்ததாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் இரு மாணவர்களில் ஒருவன், தனது தாயாரை மோசடி செய்த சம்பவத்திற்கு, மற்றொரு மாணவன் உடந்தையாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
23 வயதுடைய ஸாங் ரன்பாவ் மற்றும் 18 வயதுடைய யே யிங்ஸி என்ற இரு மாணவர்களும் நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
40 வயதுடைய தனது தாயாரை ஏமாற்றுவதற்கு 18 வயதுடைய யே யிங்ஸி என்ற மாணவன், தன்னை அரை நிர்வாணக் கோலமாக்கிக் கொண்டு, கைகால்கள் கட்டப்பட்டு இருப்பதைப் போலவும், வாயில் நாடா ஒட்டப்பட்டு இருப்பதையும் வீடியோவில் பதிவு செய்து தனது தாயாருக்கு அனுப்பி வைத்து, பிணைப் பணம் கோரியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரு மாணவர்களும் கடந்த மே 2 ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.