கோலாலம்பூர், மே.13-
தெலுக் இந்தான், சித்திரா பௌர்ணமி திருவிழாவில் இரத ஊர்வலப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பின்னர் போலீஸ் லோரியில் திரும்பிக் கொண்டு இருந்த கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்கள், விபத்தில் மரணமுற்றது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
பேரா, தெலுக் இந்தான், லங்காப், ஜாலான் சீகுஸ்- சுங்கை லம்பான் என்ற இடத்தில் இன்று காலை 8.50 மணியளவில் கற்களை ஏற்றி வந்த லோரியினால் போலீஸ் லோரி மோதப்பட்டு, ஒன்பது ஃஎப்ஆர்யூ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை ஆராய்வதற்கும், விசாரணை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சுயேட்சைப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவைப் போக்குவரத்து அமைச்சு விரைவில் அமைக்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
போலீஸ் லோரியும், கற்களை ஏற்றி வந்த லோரியும் மோதிக் கொண்டதற்கு மூலக் காரணம் கண்டறியப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மரணமுற்ற ஒன்பது வீரர்களின் குடும்பங்களுக்கும் அந்தோணி லோக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.