கோலாலம்பூர், ஜூன்.19-
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் நல்லுடல், நூற்றூக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன், கோலாலம்பூர், செந்தூல் சிவன் கோவில் அருகில் உள்ள இந்து மயானத்தில் பிற்பகல் 4 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
மஇகா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் இறுதிச்ச கலந்து கொண்டு மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருக்கு பிரியாவிடை தந்தனர்.
முன்னதாக, கோலாலம்பூர் பங்சாரில் உள்ள பழனிவேலின் இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அதிகமானோர் கலந்து கொண்டு பழனிவேலின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, பழனிவேலின் இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியதுடன், பழனிவேலின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கு தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இதே போன்று பழனிவேலின் நெருங்கிய நண்பரும், 1990 ஆம் ஆண்டு முதல் முறையாக உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றப் பின்னர் ஓர் இயக்குநராக நியமிக்கப்பட்ட பெர்ஜெயா குரூப்பின் நிர்வாகத் தலைவரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ வின்சண்ட் டான், பழனிவேலின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
பழனிவேலின் பிரேதப் பெட்டி மீது மஇகா கொடி போர்த்தப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. பழனிவேலின் விருப்பப்படி அவரின் உடல், செந்தூல் சிவன் கோவில் அருகில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.