ஹைலக்ஸ் வாகன ஓட்டுநருக்கு 13 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஜோகூர் பாரு, ஜூன்.25-

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி, முதியவர் ஒருவரின் பெரோடுவா அஸியா காரை, வேண்டுமென்றே மோதித் தள்ளிவிட்டு, தப்பித்த ஹைலக்ஸ் ரக வாகன ஓட்டுநருக்கு ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று 13 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த ஹைலக்ஸ் வாகன ஓட்டுநருக்கு எதிராக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்த வேளையில் அவரைப் போலீசார் கைது செய்தனர்.

50 வயது முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா என்ற அந்த ஹைலக்ஸ் வாகன ஓட்டுநர், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றஞ்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.

தனது ஹைலக்ஸ் வாகனத்தைப் பின்புறமாகச் செலுத்தி, அந்த முதியவரின் பெரோடுவா அஸியா காரை, மோதிச் சேதம் விளைவித்ததாகக் குற்றவியல் சட்டம் 427 ஆவது பிரிவின் கீழ் ஃபிர்டாவுஸ் அப்துல்லா குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் துன் ராஸாக், சுசுர் 6 இல் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS