அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா வருகை

மலேசியாவிற்கு முதல் முறையாக அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய தற்காப்புத்துறை அமைச்சரும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான ராஜ்நாத் சிங், இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணியளவில் பத்துமலை ​திருத்தலத்தில், ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.

மலேசியாவிற்கான இந்தியத் ​தூதர் பி.என். ரெட்டி மற்றும் தமது சிறப்பு அதிகாரிகளுடன் பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்த ராஜ்நாத் சிங்கிற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ​கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் உட்பட தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் மகத்தான வரவேற்பை நல்கினர்.

முன்னதாக, பத்துமலைத் திருத்தலத்தில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தியக்கொடியை தாங்கிய நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு வரவேற்றனர். ம​லேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கப்பட்டு வரும் உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ராஜ்நாத் சிங்கின் மலேசிய வருகையின் ஒரு பகுதியாக பத்துமலைத் திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.

நாதஸ்வர, ​மேளத்தாள இசை முழுக்கத்துடன் ராஜ்நாத் சிங்கை எதிர்கொண்டு வரவேற்று பத்துமலை திருக்கோயிலுக்கு அழைத்து வந்த டான்ஸ்ரீ டத்தோ நடராஜாவும், டத்தோ சிவகுமாரும், பின்னர் சிறப்புப் பூஜையில் கலந்து கொள்வதற்கு மிக நேர்த்தியான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தேவஸ்தானத்தின் பிரதான குருக்கள் சிவக்குமார் பட்டர் மற்றும் ரவிக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் பத்துமலை திருத்தல அலுவலகத்தில் ராஜ்நாத் சிங்கிற்கு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார். ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று 72 ஆவது பிறந்த தினம் என்பதால் தமது பிறந்த தின கேக்கை வெட்டும் நிகழ்வும் டான்ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்