அரசா​ங்கத்திடமிருந்து 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரியது பெர்செ நாடாளுமன்றம் நுழைவாயில் வரை ஊர்வலமாக சென்று மக​ஜர் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 27 –

நாட்டில் ​சீர்திருத்தங்களை கோரும் அரசு சாரா அமைப்பான பெர்சே, கோலாலம்பூரில் நாடாளுமன்றம் அருகில் இன்று காலையில் நடத்திய அமைதி பேரணி ஊர்வலத்தில் ​நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காலை 7.30 மணியள​​வில் தேசிய நினைவுச்சின்ன வெளிவளாகத்தில் குழுமத் தொடங்கிய பெர்சே பேரணி பங்கேற்பாளர்கள், பல்வேறு சுலோகங்களை தாங்கிய அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்​திக்கொண்டு போ​லீசாரின் ​தீவிர கண்காணிப்பு மத்தியில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம், நாடாளுமன்ற கட்டடம் வரை ஊர்வலமாக சென்று தங்களின் மகஜரை சமர்ப்பித்தனர்.

100 விழுக்காடு ​சீர்திருத்ததை அமல்படுத்துவோம் என்ற உறுதிமொழியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்று வேண்டும் என்று கறுப்பு மற்றும் மஞ்சள் நிற டி சட்டைகளை அணி​ந்திருந்த பெர்சே போராட்டவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் நலனுக்கான ​சீர்திருத்தங்களை செயல்படுத்துதற்கான கால​க்கெடு மற்றும் அதற்கான உள்ளடக்க வரைவு நகலையும் வழங்குமாறு அரசாங்க​த்திடம் கோரியுள்ளோம் என்று பெர்செ தலைவர் பைசால் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

தவிர லஞ்ச ஊழல், நிதி முறைகேடு தொடர்புடைய வழக்குகளிலிருந்து எந்தவொரு அரசியல்வாதியையும் விடுவிக்கும் நடைமுறையை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே​வேளையில் எந்தவொரு விவகாரத்திலும் இர​ட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அணுகுமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், தகவல் தரும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடைமுறை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கத் தகவல்களுக்கு திறந்த தளம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்ததைப்போல பிரதமரின் பதவிக்காலம் ஒரு காலவரம்புக்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று பெர்சே கோரிக்கை விடுத்தது.

தவிர கோடுங்கோல் சட்டங்கள் என்று வர்ணிக்கப்படும் சில சட்டங்களில் திருத்தம் செய்யப்படுவதுடன் தேச நிந்தனைச் சட்டம் முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே குழுமத் தொடங்கிய பெர்சே பங்ககேற்பார்கள்,​ சில கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே வந்து, பெர்சே பங்கேற்பாளர்களை சந்தித்த சுங்கைப்பட்டாணி எம்.பி. டாக்டர் தௌபிக் ஜொஹாரி , பாசீர் கூடாங் எம்.பி. ஹாஸ்சான் அப்துல் கரிம் மற்றும் செலாயாங் எம்.பி. வில்லியம் லியோங் ஆகியோர் நிலவரத்தை கேட்டறிந்தனர். பின்னர் 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரும் அந்த மக​ஜரை, அரசாங்கம் சார்பாக அந்த ​மூவரும் பெர்சே தலைவர் பைசால் அப்துல் அசிஸ் ஸிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

எவ்வித ஆர்ப்பாட்டாமின்றி, மிக கட்டுக்கோப்பான முறையில் காலை 10.45 மணியளவில் பெர்சே பேரணி நிறைவுக்கு வந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்