அரசாங்கத்தை வீழ்த்தும் துபாய் நகர்வு : எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது ! – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சில தினங்களுக்கு முன்பு வெளியான தகவலைப் போல அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துபாய் நகர்வு, தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் அதில் தாம் ஆழ்ந்த கவனத்தை செலுத்தவில்லை என்று பிரதமர் விளக்கினார்.

இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் PADU எனப்படும் தரவுகள் தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமைத்துவத்தை வீழ்த்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களும், அன்வாரின் அரசாங்கத்தில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுமுறை என்ற பெயரில் ஐக்கிய அரசு சிற்றரசின் தலைநகரான துபாயில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக சமூக தொடர்பு இலாகாவான ஜே-கோம் மின் தலைமை இயக்குநர் இஸ்மாயில் யூசோப் கடந்த சனிக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தார்.

நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு துபாய் நகர்வு நடைபெற்றதை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிட்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இதில் எதிர்க்கட்சி தரப்பினர் மட்டும் ஈடுபடவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவான சில எம்.பி.க்களும் ஈடுபட்டுள்ளனர் என்று அகமட் ஜாஹிட் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்